Tuesday, January 1, 2008

பூக்களில் உறங்கும் மௌனங்கள்...!


பின்புலக்காட்சிகளெதுவும்
புலப்படாப்பொழுது கடந்து
பூனையாய் நிலவலையும் தெருவொன்றின்
வெளிச்சம் குவியும் மையத்தில்
நீயும் நானும் மட்டும்
நின்றிருந்தோம் !

விரக்தியும்,பசியின் வீம்பும்
நிர்க்கதி நிலையும்,விழிநீரும்
நிறைந்திருந்தவுன்
நயனங்களைச் சிமிட்டிச்சிமிட்டி
சக்கையாய்ப் பிழியப்பட்டவுனது
வாழ்வினொரு பக்கத்தை - நீ
திறக்கப்போவதாயெண்ணிக் காத்திருந்தேன் !

என்ன காண நேர்ந்ததுவோ...?
எதைக் கதைக்க வந்தாயோ...?
எதனையுமுன் இதழ் திறக்கவில்லை ;
தோள் தொட்டுக்கேட்டேன்,
விழிநீர் துடைத்துக் கேட்டேன்.
விம்மித்தவித்துத் துடித்து
விளங்காப் பொருளாய்
மௌனம் உதிர்த்தாய் !

வழித்துணை மறுத்து
நீ தனியாய் வீடு சென்றாய் ,
முதுகு காட்டி நான் நகர
பெயர் சொல்லியழைத்து
கையசைத்து விடைபெற்றாய் ;
கண்ணீர் நிரம்பியவுன் செவ்விழிகளினூடு
கலங்கலாய் நான் தெரிந்தேனா?

உதிரும் வரையில் மிக ஆழமான
மௌனத்தை மட்டுமே மொழியாய்ப்பேசும்
மலர்களுக்கு ஒப்பாக
மறுநாளின் விடியலில்
உன் வளவுப்பாசிக்கிணற்று நீரைக்
குருதி நிறமாக்கி
வல்லுறவுக்கும்,வதைப்படுத்தலுக்கும்
ஆற்பட்டுக் கொல்லப்பட்டவுன்
சடலம் மிதந்தது !

நினைத்த பொழுதுதோறும் வந்து
காத்துக் கிடக்கிறோம்
உன்னிடம் கேட்கவென
ஓராயிரம் கேள்விகளோடு
நானும்,நீ துயிலுறுமுன்
கல்லறை மௌனப் பூக்களும்...!

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

12 comments:

கானா பிரபா said...

கவி நன்றாக இருக்கின்றது.
உங்களுக்கு என் ஆங்கிலப் புதுவருட வாழ்த்துக்கள்.

M.Rishan Shareef said...

நன்றிகள் கானா பிரபா.
உங்களுக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே...!

Anonymous said...

நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்
உன் கவிதை நல்லா இருக்கிறது நண்பா ....உனது கவிதைகள் உன்னை புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் ...அப்போது இந்த ஏழை நண்பனை மறந்து விடாதே .............

M.Rishan Shareef said...

உன்னை மறப்பேனா அஜித்.அப்படிச் சொல்லாதே நண்பா...

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றிகள் நண்பர் அஜித்குமார் மற்றும் அனானி.. :)

இறக்குவானை நிர்ஷன் said...

விரக்தியும்,பசியின் வீம்பும்
நிர்க்கதி நிலையும்,விழிநீரும்
நிறைந்திருந்தவுன்
நயனங்களைச் சிமிட்டிச்சிமிட்டி


வரிகள் நன்றாயிருக்கிறது ரிஷான். நல்லதொரு கவித்துவத்தை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.

M.Rishan Shareef said...

நிர்ஷன்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் இனிய நண்பா..!

naan yaar said...

அச்சோ...இது ரொம்ப சோகமா இருக்கு ரிஷான்... :(

கற்பனைதானே??

உங்களுக்கு ஒரு தனி இழை ஆரம்பிச்சு இந்தக் கவிதைகளை குழுவிலும் போடுங்க...

unga blogs-ku different names kudunga pa...differenciate panavey mudiyalai...:)

M.Rishan Shareef said...

//அச்சோ...இது ரொம்ப சோகமா இருக்கு ரிஷான்...

கற்பனைதானே??//

கதையல்ல..நிஜம் வாணி.. :)

நளன் said...

காதலின் வழி கண‌க்கின்றது :(

M.Rishan Shareef said...

அன்பின் குட்டி செல்வன்,

உங்கள் முதல்வருகை என நினைக்கிறேன்.
உங்கள் வரவு நல்வரவாக அமையட்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

MSK / Saravana said...

உணர்வற்று போய்விட்டேன்..

M.Rishan Shareef said...

அன்பின் சரவணகுமார்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)